சனி, 25 ஆகஸ்ட், 2012

அழகுக்கு ஓர் ஆராதனை

                      அபிராமி என்றால் பேரழகு உடையவள் என்று பொருள். பொதுவாகவே அழகான பெண்களுக்கு அனைவரையும் வசீகரிக்கும் சக்தி அதிகம். அத்துடன் அன்பு, அறிவு, ஆளுமைத் திறன் ஆகிய நலன்களும் வாய்க்கப்பெற்றால் அந்தப் பெண்ணால் சாதிக்க இயலாத காரியங்களே இருக்கமுடியாது. அத்தகைய பேரழகு கொண்ட ஒரு பெண் வடிவில் ஓர் அணுவுக்குள் ஒரு சிறு துகளாகத் தொடங்கி, இப்பூவுலகமாக விரிந்து, பின் பேரண்டத்தைக் கடந்து எல்லையில்லாப் பிரபஞ்சமாகப் பரந்து விரிந்திருக்கும் ஒரு மாபெரும் சக்தியைக் காட்சிப்படுத்தி, நான்மறைகளாலும், எந்த ஒரு விஞ்ஞானக்கோட்பாட்டாலும் முழுவதுமாக விளக்கமுடியாத ஒரு பேருண்மையை நாம் எளிதாகக் காணும்படி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதப் பெட்டகம்தான் அபிராமி அந்தாதி ஆகும்.

                    தமக்குத் துணைவியாகவும், தொழும் தெய்வமாகவும், பெற்ற தாயுமாகவும் கருதும் அபிராமி அம்மைக்கு அபிராம பட்டர் கட்டிய சொற்கோவில் மிகவும் பிரமாண்டமானது. உலக அதிசயங்களைப் போலக் காணும்பொழுதெல்லாம் நம்மைப் பிரமிக்கவைக்கிறது. அதன் கட்டமைப்பே மிகவும் தனித்துவம் வாய்ந்த்து. அந்தாதி என்னும் வடிவம் தமிழுக்கே உரித்தான சிறப்பு வடிவமாகும். எல்லோராலும் இதனைச் சிறப்பாகக் கையாள இயலாது. ஆழமான மொழியறிவும், கற்பனைத் திறனும், கூர்மையான சிந்தனையும் கொண்டவர்களுக்கே இது கைவரக்கூடியது. வெறும் அலங்காரமான வார்த்தைகளால் நிரப்பித் தோரணமாகத் தொங்கவிடுவது எளிது. ஆனால் காலம் உள்ள அளவும் நிலைத்து நிற்கும் ஓர் அற்புதப்படைப்பைத் தன் கூர்மதியால் செதுக்கியிருக்கும் அபிராம பட்டர் வடித்த சொற்கோவிலின் ஒவ்வொரு அடியும் நம் நெஞ்சை வியப்பால் விரியவைக்கிறது. ஒரு பாடலின் ஈற்றடி அடுத்த பாடலின் முதல் அடியாகத் தொடங்கிப் பின் இறுதியாக வரும் நூறாவது பாடலின் ஈற்றடியாக முதல் பாடலின் முதல் அடியே வரும்படி அமைத்து செந்தமிழால் ஒரு பாமாலை கோர்த்து அதைத் தன் அன்னை அபிராமிக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் அபிராம பட்டர்.

               இதனை அனுதினமும் தியானம் செய்யும்பொழுது பாராயணம் செய்வோருக்குக் கிடைக்கும் இன்பம் மிகவும் அலாதியானது. நாம் அறியாமலேயே நம்மைப் பரம்பொருளுடன் ஒன்றச் செய்யும் வல்லமை படைத்தது. எப்படியென்றால் அபிராமி அந்தாதியின் சொற்கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. எனவே நாம் உண்மையிலேயே மனம் ஒன்றி சிறிதளவு கூட கவனம் பிசகாமல் பாராயணம் செய்தால்தான் நாம் அடுத்தடுத்த பாடலுக்குத் தடையின்றிச் செல்ல இயலும். சிறிது கவனம் பிசகினாலும் பரமபத சோபன படத்தில் காணப்படும் பாம்பு போல் நம்மை முதலடிக்குச் சறுக்கிவிட்டு விடும். இதனால் எப்போதும் அலைபாய்ந்துகொண்டிருக்கும் நம் மனம் பிற சிந்தனைகளை ஒதுக்கி நம் கவனம் முழுவதையும் அன்னை அபிராமியிடம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதுதானே ஆழ்நிலை தியானம் என்பது!

                    கற்பனைகளுக்கு வரிவடிவம் கொடுப்பதில் தழிழ் மொழிக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. ஆங்கிலம் அறிவு பூர்வமானது. தமிழ்மொழி உணர்வு பூர்வமானது. கம்பனையும், பாரதியையும் ஆழ்ந்து படித்தவர்களால் இதனை நன்கு உணர இயலும். கம்பனுக்கு நிகராக அபிராமி அந்தாதியிலும் கற்பனை வளமும், மொழியழகும் கொட்டிக்கிடக்கிறது. மிக, மிக எளிய வார்த்தைகளில்கூட நுட்பமான கற்பனை செதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருமுறை படிக்கும்போதும் அதன் அழகு புதுப்புது கோணங்களில் ஜொலிக்கிறது

              . A thing of Beauty is a joy forever.(Keats) என்ற சொற்றொடர் அபிராமி அந்தாதிக்கு மிக நன்றாகப் பொருந்தும். சில அரிய படைப்புகள் அவை இயற்றப்பட்ட காலத்தைவிடப் பிற்காலத்தில்தான் பெரிதும் போற்றப்படுகின்றன. பாரதியின் கவிதைகள் இதற்கு நல்ல உதாரணம். அபிராமி அந்தாதியின் தனித்துவத்தை உணர்ந்து அதன் ஆழ்ந்த சொல்நயத்தையும், பொருள்நயத்தையும் வியந்து போற்றும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் நுட்பங்களும், ஏன் அறிவியல் உண்மைகளும் கூட அதில் பொதிந்து கிடப்பதுதான். நம் கடினமான வாழ்க்கைச் சூழலில் அபிராமி அந்தாதி ஒரு நிழல் தரும் பூஞ்சோலையாக மனதிற்கு இதமளிக்கிறது. இந்த அளவு போற்றப்படும் வகையில் அபிராமி அந்தாதியில் என்னதான் இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியம் கொள்ளலாம். இந்த வலைப்பதிவைச் சற்று தொடர்ந்து கவனித்து வாருங்கள்.